Wednesday, November 12, 2008

எங்கே ஏங்கள் ஏரிகளும் குளங்களும்?

"தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் 200 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் நீரில் உப்புத்தன்மை, இரும்பு, புளோரைட், நச்சுத்தன்மை ஆகியவை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாக இருக்கும். நீரில் அதிக அளவிலான புளோரைட் பற்களையும் எலும்புகளையும் பாதிக்கும். நச்சுத்தன்மை அதிகம் உள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் தோல் புற்று நோயும் ஏற்படும். மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது."

Water Tablet என்றழைக்கப்படும் நிலத்தடி நீர்த்திட்டுக்கள் தனித்தனியே தீவாக உருவானவை அல்ல. பூமியின் அடியாழத்தில் அவை ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் அற்புதங்களுள் இதுவுமொன்று. ஆக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீரால் மாசுபடுத்தப்படும் நீர் இந்த இணைப்பால் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் பல்வேறு இடங்களிலும் சகட்டு மேனிக்கு மாசுபாடு நிகழும்போது ஒட்டு மொத்த நீர்த்திட்டும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

நிலத்தடி நீர் எதனால் மாசுபடுகிறது?

- விரிவடைந்துவரும் நகரங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதனைச் சுற்றிய நீர் ஆதாரங்களைப் பெருக்கிக்கொள்ளத் தவறியது

- அப்படித் தவறியதோடு மட்டுமன்றி இருக்கும் பண்டைய நீர் ஆதாரங்களான ஏரிகளையும் குளங்களையும்கூட பிளாட் போட்டுக் கூறுபோட்டுக் கூவி விற்றது

- அல்லது ஏரி / குளங்களின் நீரை சுகாதாரமான முறையில் பாதுகாக்கத் தவறியது / சுழற்சி முறையில் தூர் வாராமல் அவற்றை சீரழிய விட்டது

- மழைநீர் அருகில் உள்ள குளம் குட்டைகளில் சேருவதற்கான கால்வாய்களையோ வாய்க்கால்களையோ அமைக்காமல் இருக்கும் நீர்வழிகளையும் அடைத்து விட்டது

- தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் சரியான முறையில் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் வெளியேற்றப்படுகின்றனவா என்பதை அறவே அலட்சியப்படுத்தியது (அல்லது உரிய லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டு சுற்றுச் சூழல் மாசுபாடுச் சான்றிதழ் வழங்கியது)
பாருங்கள் இது ராஜா அண்ணாமலைபுராம் கடலில் கலக்கும் காட்சி. தூரத்தில் தெரிவது பரங்கிமலை.நம்பமுடியவில்லையல்லவா? இது ஏதோ கற்பனை ஓவியமென்று நினைத்துவிடாதீர்கள். அன்று தெரிந்த நிஜக்காட்சி இது. அடையாறு என்பது உண்மையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஆறு என்பது உங்களில் எவருக்காவது தெரியுமா? சென்னை முகப்பேரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தியாகராய நகர் பேருந்து நிறுத்தம் இன்று அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ஏரி இருந்தது. அட, சாக்கடைச் சமுத்திரமாக விளங்கும் கூவமும் கூட ஒரு காலத்தில் ஆறு.!

நமக்குத் தெரிந்து சென்னை வில்லிவாக்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்குமுன் ஒரு பிரம்மாண்டமான ஏரி இருந்தது. நிஜமாகவே மிகப்பெரிய ஏரி. நல்ல மழை பெய்யும் நாட்களில் அக்கரைக்கு இக்கரை நீர் ததும்பிக்கொண்டிருக்கும். பின் ஒரு காலத்தில் அதிகாரிகளின் தயவால் ஒரு ஓரத்தில் வீட்டுப்பகுதிகள் முளைத்தன. இன்று அந்த ஏரி எங்கிருந்தது என்று வில்லிவாக்கம்வாசிகளுக்கே தெரியாது. அந்த அளவிற்கு அப்பகுதியில் வீடுகள் முளைத்துவிட்டன

அமைச்சர்களும் அதிகாரிகளும் எதையெதையோ திறந்து வைக்கிறார்களே - எவராவது ஒருவர் கடந்த 70 வருடங்களில் ஒரு ஏரியைக் கட்டுவித்தார் - ஒரு குளத்தைத் வெட்டினார் - குறைந்தபட்சம் ஒரு வாய்க்காலைத் தூர் வாரினார் என்று படித்திருக்கிறோமா?

பொருளாதாரத் தேடலில் மனிதநேயத்தையும் சமூகசிந்தனைகளையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஒரேயொரு பிரதமரும் ஒரேயொரு பொதுப்பணித்துறை அமைச்சரும் ஒரேயொரு மேயரும் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள்?

நம்மை அடிமை செய்து ஆண்ட வெள்ளையர்கள்கூடச் செய்யாத அத்தனை அட்டுழியங்களையும் கடந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் செய்து முடித்துவிட்டோம். பணத்தாசை மற்றும் பேராசை பிடித்த அரக்கர்களாக மாறி இயற்கையன்னையின் பாலை மட்டுமல்ல - மார்பகங்களையே கடித்து இரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் துவங்கிவிட்டோம். "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று முடங்கிவிட்டோம். சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் எவனோ பார்த்துக்கொள்வான் - உனக்கும் எனக்கும் என்ன ஆயிற்று? மனிதகுலத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் யாராவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து தீர்த்துவைப்பான் என்று சினிமாப் பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொள் .....நண்பா .....



No comments: