Wednesday, September 17, 2008

திடீர்த் தேவை

சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது திரையரங்கில் பார் வசதி செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவு வழங்கும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தியேட்டர்களுக்கு பெண்களின் வருகை குறைந்துவிட்டது. இதற்கு தொலைக்காட்சியின் நெடுந்தொடர்கள் - திரைப்படங்கள் வீட்டிலேயே கிடைப்பதும் ஒரு காரணம். முன்பெல்லாம் குடும்பப் படங்கள் அதிகம் வந்ததால் கூட்டமும் கணிசமாக இருந்தது. தற்போதையபடங்கள் அப்படி இல்லை என்பது காலத்தால் ஏற்பட்ட மாற்றம். இந்த நிலையில், பார் வசதி செய்யும் யோசனை தியேட்டர்களுக்கு ஆரோக்கியமானது.

வேலை வாய்ப்பு அலுவலகம்

சென்னை_சாந்தோமில் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி முடித்தோருக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் பதிவு செய்வதற்காக வந்து போகின்றனர். இதில் வெளியூர்களில் இருந்து கைக் குழந்தைகளுடன் வருவோரும், உடல் ஊனமுற்றோரும் அடங்குவர். ஆனால், போதுமான இடவசதி அங்கு இல்லாத காரணத்தால் வெயிலில் நிற்பது அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், வெளியில் ஆங்காங்கு தரையில் உட்கார்ந்திருக்கும் படியான பரிதாப நிலையும் உள்ளது. எனவே, தற்காலிக கூரைகளை இங்கு அமைக்க வேண்டியது உடனடி அவசியத் தேவையாகும். அதோடு பலரும் வந்து போகும் இடம் என்பதால் வசதியான இடமாகப் பார்த்து வேலைவாய்ப்பு அலுவலகத்தை அங்கு மாற்றி அமைக்கலாம். இது இங்கு வந்து போகும் பலரது நீண்ட நாளைய கோரிக்கை. அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்வார்களா?

ஒரு நிமிடத் தாமதம்

வெற்றியின்போது ஒரு நிமிடம் மட்டும் நிதானித்தால் ஆர்ப்பாட்டம் செய்யத் தோன்றாது. தோல்வியில் ஒரு நிமிடம் நிதானித்தாலோ எல்லாம் இருண்டுவிட்டது என்கிற எதிர்மறைச் சிந்தனை எழாது.

தோல்வியை நெஞ்சிலும், வெற்றியைத் தலையிலும் ஏற்றிக் கொள்ளாதிருக்க இந்த ஒரு நிமிடத் தாமதம் மிகவும் உதவும்..

Sunday, September 14, 2008

தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள்!!




தமிழ்நாட்டில் ஏதோ பாலும், தேனும் ஓடுவதுபோல ஒரு நினைப்பில் நாம் இருக்கும் நிலையில் `தமிழகம் ஒரு பஞ்சைப் பராரி மாநிலம்' என்ற தகவலை வெளியிட்டு ஓர் உலுக்கு உலுக்கியிருக்கிறது உலக வங்கி.
உலக வங்கியால் எடுக்கப்பட்ட வறுமை குறித்த புள்ளிவிவரம், இந்திய அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் பாதிப்பேர் ஏழைகள் என அதில் கூறியிருப்பது எதிர்காலம் குறித்த அச்சத்தை சாமானியர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது


குறிப்பாக, ``தமிழகத்தில் இரண்டு பேரில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழை. இங்கே அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முழுமையாக மக்களைச் சென்று சேராததுதான் தமிழகத்தில் ஏழைகள் பெருக்கெடுக்கக் காரணம். தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் குழந்தைகள் சத்துக்குறைவால் இறக்கின்றன'' என்று உலக வங்கி சர்வே தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது


தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஒரு ஹெக்டேருக்கு 13 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, தற்போது மூன்று டன்னாகக் குறைந்து விட்டது. நிலம் கெட்டுப்போய், விளைநிலங்களின் பரப்பு குறைந்ததே இதற்குக் காரணம். தமிழக, மத்திய பட்ஜெட்டுகளில் இயற்கை வேளாண்மையை அதிகரிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. 1947_ம் ஆண்டில் 60 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் விவசாய உற்பத்தி, நடப்பு ஆண்டில் வெறும் 18 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஆக்கிரமிப்பு போன்றவையும்தான் இதற்குக் காரணம்.


90_ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த விவசாயம், இன்று ஐந்தாவது இடத்திற்குப் போய்விட்டது. பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், `நம் நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை அனைத்து மக்களுக்கும் கொடுத்துவிட முடியும். ஆனால், சமமான பங்கீடு என்பது இங்கில்லை' என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு உற்பத்தி, சந்தை வியாபாரிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசின் திட்டங்கள் ஊழல், சுரண்டல் இல்லாமல் மக்களிடம் சென்று சேர்ந்தால் அறக்கட்டளைகள், இலவசங்கள் என்ற வார்த்தைகளே இல்லாமல் போய்விடும். இல்லாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வங்கி வெளியிடப் போகும் சர்வே விவரத்தில், உலக ஏழைகளில் நாம் கணிசமான அளவு இன்னும் முன்னேறியிருப்போம்''


தகவல் :- நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் -- விஜயானந்த்

தங்களின் மேலான கருத்துக்களையும் பதிவு செய்யவும்